இல்லறம் நல்லறமாக 10 வழி காட்டுதலகள்
1.அன்பு காட்டுங்கள் : உங்கள் மனைவியிடம் அன்பு காட்டுங்கள். என்னதான் வேலைக்காக காலில் றெக்கை கட்டிப் பறந்தாலும், மனைவியை மறக்காதீர்கள். சில சமயங்களின் நமது கணவர் நம்மிடம் அன்பாக இல்லையே என்ற எண்ணம் எழுந்துவிடக்கூடும். தினமும் ஒரு முறையாவது,"நான் உன்னை மனமார நேசிக்கிறேன்', சுருக்கமாகச் சொன்னால் "ஐ லவ் யூ' என்று சொல்லுங்கள். அந்த ஒரு வாக்கியம் பல அதிசயங்களை நிகழ்த்தும்.
2.நச்சரிக்காதீர்கள்: பொறுமைக்கு ஓர் எல்லை உண்டு என்பது எல்லாரும் அறிந்ததே. அதனால் மனைவியின் பொறுமையை ஓரளவுக்கு மேல் சோதிக்காதீர்கள். உங்களின் நச்சரிப்பு குறிப்பிட்ட அளவைத் தாண்டும்போது பிரச்னைகள் தலை தூக்கும். நீங்கள் செய்ய விரும்பும் செயல்களையே உங்கள் வாழ்க்கைத் துணையும் செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்களைத் திருமணம் செய்துகொண்டதால் அவர்கள் தங்களுடைய பாணியில் சிந்திக்கவும், செயல்படவும் கூடாது என்று நினைப்பது தவறு. அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதியுங்கள். அப்புறம் பாருங்க ரிசல்ட்டை!
3.மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்: நீங்கள் உங்கள் மனைவியை மதித்தால், அவர்கள் உங்களை மதிப்பார்கள். ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அடையாளங்கள் உண்டு. உங்கள் வாழ்க்கைத் துணையைப் பொது இடத்தில் வைத்து அவமானப்படுத்தவோ, அவர்களிடம் கோபமாக பேசவோ செய்யாதீர்கள். அதே போன்று உங்கள் துணையின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்.
4.பிரச்னையை வளரவிடாதீர்கள்!: தம்பதிக்குள் ஒரு பிரச்னையோ, கசப்பான வாதங்களோ ஏற்பட்டால் அதை மனதுக்குள்ளே வைத்து பின்னால் சண்டை போடாதீர்கள். அந்தந்த பிரச்னையை அப்போதே பேசித் தீர்த்துவிடுங்கள். உங்கள் பக்கம் தவறிருந்தால், "ஸôரி' சொல்வதற்கு தயங்காதீர்கள். ஏற்கெனவே முடிந்து போன பிரச்னையை அவ்வப்போது கிளறாதீர்கள்.
5.பேசுங்க...: தம்பதி இருவரும் மனம்விட்டுப் பேசுங்கள். நீங்கள் எவ்வளவு அதிகமாக பேசுகிறீர்களோ, அவ்வளவு நெருக்கத்தை உணர்வீர்கள். உங்கள் மனைவியோ, கணவனோ தொலைவில் இருந்தாலும், அலுவலகத்தில் இருந்தாலும் ஒரு போன் செய்து, "சாப்பிட்டாச்சா?, எப்ப வேலை முடியும்' என்று ஓரிரு வார்த்தைகள் பேசுவதில் தவறில்லை.
6.தங்கள் உண்மையுள்ள....: ஒருவருக்கொருவர் உண்மையாக இருங்கள். எந்த மனிதனும் 100-க்கு 100 சதவிதம் சரியாக இருக்க முடியாது. அவரவர் குறை நிறைகளுடன் அவர்களை ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ளுங்கள். உங்கள் துணையை முழுதாக நம்புங்கள்; அவர்களுக்கும் நம்பிக்கையானவராக இருங்கள். ஏனென்றால் ஒரு சிறிய செல்போன்கூட உங்களுக்குள் பிரச்னையை கிளப்பலாம். எனவே ஒளிவு, மறைவின்றி வாழுங்கள்.
7.சமரசம்: ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒரு சமயத்தில் யாரிடமாவது சமரசத்தில் ஈடுபட்டிருப்போம். நாம் ஆசைப்பட்ட அனைத்தும் நம் கைக்கு கிடைத்துவிடும் என்று நினைக்க முடியாது. இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக வாழ வேண்டும். நீங்களும் உங்கள் வாழ்க்கைத் துணையும் சந்தோஷமாக வாழ்வதற்கு பல சமரசங்களைச் செய்வதில்லை தவறொன்றுமில்லை.
8.அது கணவன் மனைவிக்கு சமையலில் உதவி செய்தாலும் சரி; மனைவி கணவனுடன் அமர்ந்து அவருக்குப் பிடித்த ஆங்கிலப் படத்தை தொலைக்காட்சியில் பார்த்தாலும் சரி. இதனால் அந்த நாளின் இறுதியில் மகிழ்ச்சி மட்டுமே மிஞ்சும்.
9. பிரத்யேக நாள்கள்: என்ன வேலை, எவ்வளவு பிஸி என்றாலும் முக்கியமான நாள்களை மறந்துவிடாதீர்கள். குறிப்பாக உங்கள் திருமண தேதி, மனைவி அல்லது கணவனின் பிறந்தநாள்கள் போன்ற நாள்களை நினைவில் கொள்ளுங்கள். இதுபோன்ற பிரத்யேக நாள்களில் உங்களின் பங்களிப்பு கணவன்-மனைவி உறவில் ஒரு மைல்கல்லாக மாறும்.
10. குறைத்து மதிப்பிடாதீர்கள்!: உங்களுக்காக உங்கள் வாழ்க்கைத் துணை என்ன செயல்களைச் செய்கிறாரோ அதற்கு மதிப்பளிக்க வேண்டும். அவர்களின் செயல்களையோ, உங்களுக்காக அவர் எடுக்கும் முயற்சியையோ குறைத்து மதிப்பிடாதீர்கள்.
உங்கள் பக்கத்தில் இருந்து நீங்கள் 10 சதவீதம் மாற்றத்தைக் காண்பித்தால், உங்கள் கணவன்/ மனைவியிடம் இருந்து 100 சதவீதம் மாற்றத்தை நீங்கள் காண முடியும்.
முதலில் யார் தொடங்குவது என்பதுதான் பிரச்னை?
அது நீங்களாக இருக்கவே விரும்புங்கள்
இல்லறம் சிறக்க வாழ்த்துகள்! இல்லறம் நல்லறமே !!நன்றி தினமணி :